Pages

Powered By Blogger

“50 ரூபா மாலைக்குக் கூடவா எங்களுக்குத் தகுதியில்லை..?”


சென்ற மாதம் காலமான கதாசிரியர், இயக்குநருமான கலைமணியின் மரணம் தமிழ்ச் சினிமாவுலகத்தில் எந்தக் கவனத்தையும் ஈர்க்காமலேயே போய்விட்டது..!


தமிழ்ச் சினிமாவின் ஒரு திருப்பு முனை படமான '16 வயதினிலே' படத்தின் கதை, வசனகர்த்தா இவர்தான்..! 'மண்வாசனை'யும் இவருடைய கதை, வசனம்தான். 'இங்கேயும் ஒரு கங்கை', 'சிறைப் பறவை', 'முதல் வசந்தம்', 'தெற்கத்திக் கள்ளன்', 'பொறுத்தது போதும்', 'சிறையில் பூத்த சின்ன மலர்', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'மனைவி சொல்லே மந்திரம்', 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்; என்று பல பிரபல படங்களுடன் சேர்த்து 85 படங்களுக்கு கதை எழுதியவர். 5 படங்களை இயக்கியுள்ளார். 13 படங்களை தயாரித்துள்ளார். விஜய் நடித்த குருவி படத்துக்கும் இவர்தான் வசனகர்த்தா..!


குடல் புற்றுநோயால் கடந்த 2 ஆண்டு காலமாகவே சிகிச்சை பெற்று வந்த கலைமணி இறுதி காலத்திலும் டிவி சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார். மருத்துவ சிகிச்சைகளுக்கு இவருடைய சீடர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.

அஞ்சலி செலுத்த வந்த 'கடலோரக் கவிதைகள்' ரேகா கதறி அழுதுவிட்டார். கலைமணிதான் ரேகாவை, பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தாராம். தனக்கு ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து தன்னை வழி நடத்தியதாகச் சொன்னார் ரேகா. அனைவருக்கும் முன்பாகவே வந்த விஜயகாந்த், அவசரம், அவசரமாக தனது மரியாதையைச் செலுத்திவிட்டு அப்படியே வந்த கையோடு பக்கத்து தெருவில் இருந்த ஆச்சி மனோராமாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பறந்தோடினார். சுஹாசினி, மோகன், ராதிகா மூவரும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள் பாரதிராஜா வருவாரென்று..! ஆனால் அவர் வராமல் அவருடைய பையனை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். 


பாரதிராஜா வராதது மாத்திரமல்ல.. கலைமணியின் இறப்புக்கு இயக்குநர்கள் சங்கமும் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கலைமணியின் சீடரும், நடிகரும், இயக்குநருமான மனோபாலா ரொம்பவே வருத்தப்பட்டார். இறப்புச் செய்தியை இயக்குநர் சங்கத்திற்கு சொன்னவுடன், “அவர் இப்போ உறுப்பினரா இல்லை. அவரோட கார்டு லேப்ஸ் ஆயிருச்சே.. அதுனால சங்கம் சார்பா யாரும் வர முடியாது..” என்று கவர்ன்மெண்ட் ஆபீஸ் போல பதில் சொன்னார்களாம் சங்கத்தில் இருந்தவர்கள்..! அடக்க நாளன்று பொறுமையாகவே இருந்த மனோபாலா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடத்திலும் இதனைச் சொல்லி பெரிதும் வருத்தப்பட்டார். “ஏங்க ஒரு 50 ரூபா மாலை போடக் கூடவா லாயக்கில்லாம போயிட்டோம் நாங்க..” என்று கோபமாகவே பேட்டியும் கொடுத்தார். மறுநாள் இயக்குநர்கள் சங்கத்திற்குச் சென்று ஆவேசமாக சாமியாடிவிட்டும் வந்தார்..! 

இதாவது பரவாயில்லை.. பழம்பெரும் நடிகையும், கே.ஏ.தங்கவேலுவின் மனைவியுமான சரோஜாம்மாவின் மரணத்துக்கு அஞ்சலி தெரிவிக்க முக்கிய சினிமாக்காரர்கள் யாரும் அந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லையாம்..! நடிகர் சங்கத்தினரே கண்டு கொள்ளவில்லை என்று அக்குடும்பத்தினர் அப்போதே வருத்தப்பட்டனர். அவர்களும் இதே காரணத்தைத்தான் சொன்னார்களாம்.. மிகச் சொற்பமான உறவினர்களுடன் சுடுகாட்டுக்குப் பயணமானார் சரோஜாம்மா. 

ஆனால் கலைமணியை அந்த அளவுக்கு விடவில்லை அக்கம்பக்கத்தினர். அந்தப் பகுதி ஆட்டோக்காரர்கள், சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் என்று அனைவரும் ஒன்று சேர ஒரு ஊரே திரண்டிருந்தது கலைமணியின் சவ ஊர்வலத்தில்.. ஜாம்ஜாமென்று அவரவர் சொந்தக் காசில், வெடிகளை வெடித்தும் ஆர்ப்பாட்டமாய் கொண்டு போய் சேர்த்தார்கள்..! கலைமணி அந்த அளவுக்கு அக்கம்பக்கத்தினர் மீது பாசமாக இருப்பாராம்..! அதிலும் ஆட்டோக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் மீது அளவு கடந்த பாசமாம்.. தோளில் கை போட்டு தோழமையுடன்தான் பேசுவாராம். கண்கலங்கிப் போய்ச் சொன்னார்கள்..!

“இவங்களுக்கு இருந்த ஒரு சின்ன மனிதாபிமான உணர்வுகூட வெள்ளித்திரைல உணர்ச்சிகரமா நடிச்சுக் காண்பிக்கிற சினிமாக்காரங்ககிட்ட இல்லையே..” என்றார் மனோபாலா..! 


வெறுப்பாகத்தான் இருக்கிறது..!

THANKING YOU
Read more: http://truetamilans.blogspot.com
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

0 Response to "“50 ரூபா மாலைக்குக் கூடவா எங்களுக்குத் தகுதியில்லை..?”"

Post a Comment