Pages

Powered By Blogger

முதல்வருன்னா இப்படி இருக்கணும்



ஸ்பெக்ட்ரம் ஊழல் ரூபாய்க்கு எத்தனை சைபர்கள் என்ற ஆராய்ச்சியில் தீவிரமாக உள்ள தமிழக மக்கள், அரைக்கோடிக்கும் கம்மியான மதிப்புள்ள சொத்துக்களும், வங்கியில் இரண்டு லட்ச ரூபாய் கடன் பாக்கியும் வைத்துள்ள முதலமைச்சரை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் பீகாரின் முதலமைச்சர் நிதீஷ்குமார். ஷேவ் செய்யாமல் வெறும் கத்திரிகோலை கொண்டு டிரிம் செய்யப்பட்ட முள்தாடியுடன் எப்போதும் இருப்பவர்.

தமிழகத்தைப்போல பீகார் முன்னேறிய மாநிலம் இல்லை. தமிழகத்தைப்போல படித்தவர்கள், விபரம் அறிந்தவர்கள் அதிகம் இல்லை. சட்டம் ஒழுங்கு சரி இருக்காது. வேலைவாய்ப்பு இருக்காது. வளர்ச்சித் திட்டங்கள் பெரிதாக இருக்காது. இதெல்லாம் பேப்பரை படித்துப் படித்து, பீகாரைப் பற்றி இருக்கும் பரவலான அபிப்ராயம்.

பீகார் பின்தங்கிய மாநிலம்தான். அங்கு லல்லு பிரசாத்தின் குடும்ப சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது மட்டுமல்ல, தொடர்ந்து இரண்டாவது முறையாக, வெறும் வெற்றியாக இல்லாமல் மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் முதலமைச்சராக ஆகியிருப்பவர்தான் நிதீஷ்குமார்.

பொது வாழ்க்கையில் கண்ணியமான வர்களைப் பார்த்திட முடியும். நேர்மையான வர்களைக்கூட பார்த்திட முடியும். ஆனால் எளிமையானவர்களை காண்பதுதான் அரிதிலும் அரிது. அந்தக் காலத்திலிருந்தே கூட பார்த்தோமானால் நேர்மை, உண்மை ஆகிய பண்புகள் உள்ளவர்களாக பல தலைவர்களை சுட்டிக்காட்டிடலாம். ஆனால் எளிமையானவர்கள் என்று தேடினால் திரும்பத் திரும்ப கக்கனும், காமராஜரும் மட்டுமே கிடைப்பார்கள். காரணம் எளிமையை பொதுவாழ்க்கையில் கடைபிடிப்பது அவ்வளவு கடினமான சமாச்சாரம்.

கக்கனைப் பற்றியும் காமராஜரைப் பற்றியும் நிறைய தகவல்கள் உள்ளன. தேசிய அளவில் இவர்களைப் போல வாழ்ந்த தலைவராக கூறப்படுபவர் லால்பகதூர் சாஸ்திரி மட்டும்தான். நாட்டுக்கே பிரதமராக இருந்த இவருக்கு என சொந்த வீடு இருந்ததில்லை. சொந்தமாக காரும் இல்லையாம். அதைவிட ஆச்சரியம்... யாரும் தனக்கு எந்தவிதமான அன்பளிப்போ, நன்கொடையோ அளிக்கக் கூடாது என்று கூறி அதில் உறுதியாகவும் இருந்தாராம். எதையும் தனக்கென பெற்றுக் கொள்ள மாட்டாராம். இரண்டு மூன்று செட் உடைகள் தான். அதிலும் ஒரு சட்டை கிழிந்து, அது தைக்கப்பட்டிருக்கும். அந்தத் தையல் அவரது கோட்டால் மறைக்கப்பட்டிருக்கும். தனது மனைவி தன்னிடம் ஆசையாகக் கேட்ட பட்டு சேலையைக் கூட வாங்கித் தர முடியவில்லையாம் அவரால். இத்தனை எளிமையாய் வாழ்ந்தார் லால்பகதூர் சாஸ்திரி என்பது பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஊர் காசுக்கு ஆசைப்படாமல் வாழ்ந்த உத்தம தலைவர்களில் எளிமையே உருவமானவர் சாஸ்திரி.

இப்போதுள்ள தலைவர்களில் எளிமை பற்றியெல்லாம் பேச்சே எடுக்கக் கூடாதுதான். ஆனாலும் நிர்வாகத் திறனும், நல்லதொரு ஆட்சியைத் தர வேண்டுமென மெனக்கெடுவது போலவும் தெரியும் தலைவர்களில் இப்போதைக்கு பீகாரின் நிதீஷ்குமாரும்தான். இரண்டாம் முறையாக நிதீஷ் பொறுப்பேற்றவுடன் போட்ட மிக முக்கியமான உத்தரவு என்னவெனில், அமைச்சர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்கள் சொத்துக் கணக்குகளை காட்ட வேண்டும்.அதுவும் டிசம்பர் 31&ம் தேதிக்குள் என்ற உத்தரவுதான்.

இதையடுத்து முதல்வரின் சொத்து விபரங்கள் அம்மாநில அரசின் வெப்சைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி, நிதீஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ.46.42 லட்சம்தான். ரொக்கப்பணம் ரூ.31,760, வங்கியில் இருப்பு ரூ.57,770. தவிர 2003 மாடல் சான்ட்ரோ கார், பழைய டி.வி. செட், பழைய ஏர்கண்டிஷனர், கம்ப்யூட்டர், கூலர், டிரெட் மில், கறவை மாடு... இவற்றின் மதிப்பு ரூ. 1.67 லட்சம். தவிர ரூ.47 ஆயிரம் மதிப்பிலான இரு தங்க, ஒரு வெள்ளி மோதிரங்கள். தவிர டெல்லியில் சன்சத் விகாரில் ரூ.40 லட்சம் பெறுமான வீடு. நாடாளுமன்றத்தில் உள்ள ஸ்டேட் பேங்கில் ரூ.1.93 லட்சம் வரை கடன் உள்ளதாம் நிதீஷுக்கு. தான் ஆளும் மாநிலத்தில் காணி நிலம் கூட இல்லை. இவர் மகன் நிஷாந்த் பரவாயில்லை. இன்ஜினியரான இவருக்கு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் ரூ.41 லட்சமும், பாட்னாவில் இரண்டு சொந்த வீடுகளும் வைத்துள்ளதால் இவரது சொத்து மதிப்பு ஒருவழியாக கோடியை தாண்டுகிறது.

ஊழலை ஒழிப்பேன்; ஒளிவுமறைவற்ற நிர்வாகம் அளிப்பேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தவர் நிதீஷ். ஊழல் சொத்துக்களை அரசாங்கமே பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டு வந்துள்ளார். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இதெல்லாம். கண்ணில் தெரியும், காதில் கேட்கும் இந்த எல்லாமே உண்மையாக இருந்தால் ஒவ்வொரு குடிமகனும் நிதீஷுக்கு ஒரு சல்யூட் செய்யலாம்தான்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூட, நான் வெறும் பைஜாமா குர்தாவுடன் பம்பாயின் தெருக்களில் வசித்தவன் என அடிக்கடி கூறுவார். ஆனால் இப்போதோ பஞ்சாபி மனைவி கவுரும், நண்பி ஜெயா ஜெட்லியும், பிள்ளைகளும் அடித்துக் கொள்ளும்போதுதானே தெரிகிறது... பலகோடி ரூபாய் சொத்துக்களின் அதிபதி அவர் என்பது.

ஆனால், சோனியாகாந்தி கூட வேட்புமனுவில் சொன்னாரே, ‘எனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்று... இதுபோன்றவற்றையும் பார்க்கும்போது, அரசியல்வாதிகள் காட்டும் சொத்துக்கணக்குகளை சீரியஸாக எடுப்பதா? வேண்டாமா? என்ற கேள்வி நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!




நன்றி: தமிழக அரசியல் வார இதழ்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

0 Response to "முதல்வருன்னா இப்படி இருக்கணும்"

Post a Comment