Pages
பகரைனில் நடப்பது என்ன? அதிர்ச்சித் தகவல்கள்
Posted in
Labels:
உலக செய்திகள்
|
at
9:58 AM

பகரைன் என்னும் சின்னஞ்சிறிய நாடானது, மத்தியக் கிழக்கில் கத்தார் மற்றும் சௌதி அரேபியா நாடுகளுக்கு இடையில் பாரசீக வளைகுடாவில் அமைந்திருக்கும் தீவு நாடாகும். சுமார் 750 ச.கி.மீ பரப்பளவும், ஒரு மில்லியனுக்கும் சற்றே அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட எண்ணெய் வளம் மற்றும் முத்து வளம் மிக்கதொரு நாடு. இந்நாட்டினை ஆட்சிப் புரிந்து வருபவர் ஹமாத் பின் ஈசா அல் கலிஃபா என்ற பெயருடைய மன்னர் ஆவார். 75 சதவீதம் சியா பிரிவு இஸ்லாமிய மக்கள் வாழ்கின்ற நாட்டில் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் தம் வசமாக்கி வைத்துள்ளனர் சன்னிப் பிரிவு இஸ்லாமியர்கள்.
இஸ்லாத்தில் இருக்கும் 7 பெரும் பிரிவுகளில் ஒன்றுத் தான் சன்னி இஸ்லாம். மற்றயவைகள் சியா, சுஃபி, இபாதி, குரானி, அகமதியா, சலாஃபி ஆகும். ஒவ்வொரு உட்பிரிவினருக்குள்ளும் பகை உணர்ச்சி அதிகமாகும். குறிப்பாக சன்னி மற்றும் சியா உட்பிரிவுகள் அதிரப் பொருந்துவது வழக்கமான ஒன்றாகும். பெரும்பாலான நாடுகளில் சன்னி பிரிவு இஸ்லாமியர்களே அதிகம் வசிக்கின்றனர். ஆனால் பகரைனில் சியாப் பிரிவினரே அதிகம் வசிக்கின்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து அனைத்து அதிகாரங்களில் இருந்தும் மட்டம் தட்டப்பட்டு வருவது நீடித்து வருகின்றது.
அல் கலிஃபா குடும்பம்
பகரைனை ஆளும் அரசக் குடும்பம் அல் கலிஃபா குடும்பம். பகரைனின் பெரும் செல்வங்களை தம் வசமாக்கிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் கடந்த இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வருபவர்கள் இவர்கள். உண்மையில் அல் கலிஃபா குடும்பம் பகரைனின் மண்ணின் மைந்தர்கள் இல்லை. அவர்கள் குவைத்துக்கு அருகே இருக்கும் நஜத் என்னும் ஊரில் இருந்து 18ம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்து வந்த அனிசா குலத்தைச் சேர்ந்தவர்கள். பகரைனை ஆளும் அமைச்சரவையில் பாதிக்கும் அதிகமானோர் இந்தக் குடும்பத்து உறுப்பினர்களே ஆவார்கள்.
பகரைனின் வரலாறு
தற்சயம் பகரைனை ஆளும் மன்னர் கடந்த 2010-ம் ஆண்டு தம்மை அரசராகப் பிரகடன்ப்படுத்திக் கொண்டார். இது அந்நாட்டில் வாழும் சியாப் பிரிவு மக்களை பெரும் அதிருப்தியில் ஆழ்தியது. 1948ம் ஆண்டு வரை பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த பகரைன். அக்காலக்கட்டங்களில் வெறும் துறைமுக கிரமாமாகவே இருந்தது. பகரைனில் அப்போது கிருத்துவர்களும், யூதர்களும் செறிந்து வாழ்ந்து வந்தனர். 1932-ல் பகரைனில் பெற்றோலியம் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் பின்னரே பகரைன் முக்கியத்துவம் பெறத் தொடங்கி வளர்ச்சிப் பாதையில் சென்றது.
இதனால் 1940-களில் அங்கு பெரும் கலகம் வெடித்து அங்குள்ள யூதர்கள் உட்பட வேற்றுச் சமயத்தவர்கள் நாட்டைவிட்டு துரத்தப்பட்டனர். 1979-களில் இரானில் ஏற்பட்ட சியா இஸ்லாமிய புரட்சியின் போது பக்ரைனில் வாழ்ந்த சியா தலைவர்களும் ஒரு கலகத்தை ஏற்படுத்தினர், ஆனால் அந்தக் கலகம் தோல்வியில் முடிந்தது. சியாப் பிரிவு மதத்தலைவர்கள் ஆளும் அரசினை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்தி வந்தனர். மார்ச் 1999-ம் ஆண்டு ஆளும் அரசரின் மறைவுக்குப் பின் அரசர் ஹமாத் இபின் ஈசா அல் கலிஃபா நாட்டின் தலைவர் ஆனார். இவரது ஆட்சியில் பழமைவாத கருத்துக்களை கொஞ்சம் நகர்த்தி பாராளமன்ற அரசியலை ஏற்படுத்தினார். அதில் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அச்சமயத்தில் அவரின் நடவடிக்கைகள் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் பாராளமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமதுக் குடும்பத்தாருக்கு போட்டியின்றி அளிக்கப்பட்டது. 2002-ம் ஆண்டு பகரைன் என்பது பகரைன் அரசதானியாக அறிவிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு தம்மை முடிசூடிய அரசராக அறிவித்துக் கொண்டார் ஹமாத். இன்றளவும் பக்ரைனை ஆளும் அமைச்சரவையில் பெரும்பாலானோர் சன்னிப் பிரிவு இஸ்லாமியர்கள் ஆவார்கள். சியாப் பிரிவினர் இராணுவத்திலும், காவல்த்துறையிலும் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகரைன் மக்கள் புரட்சி
பக்ரைன் எப்போதுமே மற்ற இஸ்லாமிய அரபு நாடுகளை விடவும் சமத்துவமான நாடாக கருத்தப்பட்டது. ஆனால் எகிப்தில் நடந்து முடிந்த மக்கள் புரட்சியினைஅடுத்து அது பகரைனுக்கும் பரவத்தொடங்கியது. ஒரு தலைமுறைக்கு முன் இருந்த நிலைமை தற்சமயம் பகரைனில் இல்லை. பெரும்பாலும் கல்வி கற்ற இளைய தலைமுறையினர், பகரைனை அனைத்து சமூகங்களும் சமத்துவமாக வாழக்கூடிய ஜனநாயக நாடாக மாற்ற விழைகின்றனர். ஆனால் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர் ஆளும் கலிஃபா குடும்பத்தினர். எகிப்து மற்றும் துனிசியாவில் நடந்தவைகளைக் கண் கூடாகப் பார்த்த பின்னும் பகரைனின் ஹமாத் மாற்றத்தை நோக்கி நாட்டினை நகர்த்த விரும்பவில்லை. மாறாக மக்கள் போராட்டத்தினை நசுக்கி விட இராணுவத்தினரை ஏவிவிட்டார்.
கடந்த புதன்கிழமை நாட்டின் முத்துச் சதுக்கத்தில் குழுமி இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுத் தாக்குதல் நடத்தினார்கள் இராணுவம். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குள்ள கொட்டைகைகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், ரப்பர் குண்டு, கண்ணீர் புகைக் குண்டு சகிதம் சரமாரியாக தாக்கினார்கள். இத்தாக்குதல்களில் சம்பவ இடத்திலேயே 6 பேர் மரணமடைந்தனர். 40 பேருக்கும் அதிகமானவர்கள் காணமல் போயினர்.
அத்தோடு மட்டுமில்லாமல், காயம் பட்டவர்களுக்கு வைத்தியம் செய்ய வந்திருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் சியா மக்களின் உரிமைகளைக் காக்கவும், அரபு நாடான பகரைனில் ஜனநாயகத்தை நிறுவ முயன்ற மக்கள் மீது நடத்திய இந்தத் தாக்குதல் பெரும் கண்டனத்தை உலகெங்கும் ஏற்படுத்தியது.
நெடுங்காலமாக அமெரிக்காவின் தோழமை நாடாக இருந்த வந்த பகரைனின் இந்த செயல் பல அமெரிக்கர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பகரைனின் கலகத்துக்கு இரானின் உளவுப்படை மீது ஆளும் அரசு பழிசுமத்தினாலும், உண்மையான மக்களின் போராட்டம் என்றுமே தோல்விக் கண்டதில்லை. சமத்துவமான, ஜனநாயக நாட்டினை உருவாக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும். இதேப் போல மக்கள் போராட்டம் இரானிலும் வெடித்துள்ள நிலையில் பகரைனையும், இரானும் எகிப்து, துனிசியா புரட்சியில் இருந்து சரிவர பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.
பகரைனின் போராட்டத்தின் அடுத்தக் கட்ட நகர்வாக தோழமை நாடான அமெரிக்காவே பகரைனின் செயலை வன்மையாக கண்டித்துள்ளது. அமெரிக்க அரசாங்க செயலாளர் ஹில்லாரி கிளிண்டன், வியாழக்கிழமை தமது கடும் கண்டனத்தையும், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் படி பகரைன் அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

சியா பிரிவினரின் இந்தப் போராட்டம் மத்தியக் கிழக்கில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கி உள்ளது. சியாப் பிரிவு பெரும்பான்மையாக வாழும் இரான், பகரைன் மற்றும் கிழக்கு சௌதி அரேபியா பகுதிகளில் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தக் கூடும் என்ற அச்சம் சௌதி அரேபியாவில் ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால் மக்கள் போராட்டம் பகரைனில் வெற்றியடையும் பட்ச்சதில் ஏனைய அரபு அரசாட்சிகளும் கவிழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது இரான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவினாலும், இந்தக் கலகம் இரானுக்கும் ஆப்பாய் அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே இரானில் மக்கள் போராட்டம் வெடித்து விட்ட நிலையில், அதனை இரான் அடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஒரு விதத்தில் இந்த மக்கள் போராட்டங்கள் அரசியல் செய்யும் நாடுகளையும், ஊழல் செய்யும் அரசுகளையும் கவிழ்க்கும் பொறியாய் மாறியுள்ளது. இதனால் வெகு விரைவில் மத்தியக் கிழக்கு மட்டுமின்றி அதனருகே இருக்கும் தென் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் இத்தகையப் போராட்டங்கள் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மதிக்காத அராஜக ஊழல் அரசுகள் அனைத்துமே கவிழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனம்.
இப்பதிவினை எழுதியவர் இக்பால் செல்வன். மேலும் இக்பால் செல்வனின் எழுத்துக்களைப் படிக்க இங்குசெல்லவும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "பகரைனில் நடப்பது என்ன? அதிர்ச்சித் தகவல்கள்"
Post a Comment